< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
4 Jun 2023 6:35 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி ஊராட்சியில் 2-வது மற்றும் 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகவே குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வந்தன. இது குறித்து மணமேல்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தவுடன் 2021-ம் ஆண்டு மின்மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த மின்மாற்றிக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக குறைவான மின்னழுத்தத்தில் மின்சாரம் கிடைப்பதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றிக்கு மின் இணைப்பு வழங்கி குறைந்த மின் அழுத்தத்திற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கட்டுமாவடி.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

புதுக்கோட்டையில் இருந்து ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி வழியாக கந்தர்வக்கோட்டைக்கு அரசு நகர பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

விராலிமலை காமராஜர்நகர் பகுதியில் சுமார் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்பவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலை ஓரத்திலேயே கொட்டி விடுகின்றனர். நீண்ட நாட்களாக இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றாததால் அந்த இடம் குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்திற்கு அவ்வப்போது புகார்கள் செல்லும் போது மட்டும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் அந்த குப்பைகளை தீயிட்டு எரித்து விடுகின்றனர். அதன் பிறகு மீண்டும் அதே இடத்தில் பொதுமக்கள் தங்கள் குப்பைகளை கொட்டுவதால் ஒருவித துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. அது மட்டுமின்றி அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்வதோடு குப்பைகளை மிதித்துக்கொண்டு செல்லும் நிலைமைக்கு உள்ளாகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், விராலிமலை.

மேலும் செய்திகள்