திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள உப்பிலியபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் 2 கட்டிடங்கள் 30 படுக்கைகளுடன், தினசரி சுமார் 300 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இங்கு வெளிநோயாளிகளுக்காக 2 கழிவறைகள் மற்றும் குறைந்த கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. வெளிநோயாளிகளுக்கென தனியாக கழிவறைகள் பார்வையில் தென்படும்படி தனி வளாகத்தில் கட்டி, அதிக கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நோயாளிகள், உப்பிலியபுரம்.
அதிகாலையிலேயே தொடரும் மது விற்பனை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பனை செய்பவர்கள், அரசு மதுபான கடைகளில் மொத்தமாக மதுபாட்டுகளை வாங்கி அனுமதி இல்லாத நேரங்களில் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஒரு சில நாட்கள் மட்டுமே திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் மீண்டும் சமயபுரம், எதுமலை, சிறுகனூர், வலையூர், திருப்பைஞ்சீலி, கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட், சிறுகாம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாலையிலும், இரவு அரசு மதுபான கடையை பூட்டிய பிறகும் மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது தேவையில்லாத தகராறும் ஏற்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் மனித உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், அடிதடி, வெட்டு- குத்து போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சமயபுரம்.
ஆபத்தான இடத்தில் கியாஸ் குடோன்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், மேலபாகனூர் குடித்தெரு மயான எரிமேடை அருகே தனியாருக்கு சொந்தமான எரிவாயு கியாஸ் குடோன் உள்ளது. இந்த குடோனிலிருந்து பகல் மற்றும் மாலை நேரங்களில் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயான எரி மேடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் போது அங்கிருந்து நெருப்பு துகள்கள் பறந்து சென்று குடோன் முன்பு அடுக்கி வைக்கப்பட்டுள்ள கியாஸ் சிலிண்டர்கள் மீது பட்டு அதனால் சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதை தவிர்க்க அப்பகுதியில் இயங்கும் தனியார் கியாஸ் குடோனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அந்த குடோனை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஊரவ வளர்ச்சி உதவி இயக்குனர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை மேலபாகனூர் குடித்தெரு மயான மேடை அருகே உள்ள கியாஸ் குடோனை அங்கிருந்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதற்கு உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலா, மணிகண்டம்.