பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம், சிறுவாச்சூர் பகுதி சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதினால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நாரணமங்கலம்.
ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பைகள்
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் சந்தைப்பேட்டை ஏரிக்கரையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழை பெய்யும்போது இந்த குப்பைகள் ஏரிகளில் அடித்துச் சென்று தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரஞ்சிதா, பாடாலூர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாலுகாவிற்கு உட்பட்ட சில கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றன. எனவே ஆலத்தூர் தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேந்தர், ஆலத்தூர்.