அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
அரியலூர் டவுனில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் மாவட்ட அரசு மருத்துவமனை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழே ரெயில் நிலையத்தை நோக்கி செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக மாறி மிக மோசமாககாட்சியளிக்கிறது. இந்த மேம்பாலத்திற்கு சர்வீஸ் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவில்லை. அரியலூரில் இருந்தும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ரெயில்களில் பயணிப்பதற்காக வாகனங்களில் வந்து செல்வோரும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மேலும் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள கோவிலுக்கு வழிபடுவதற்காக வரும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை விரைந்து சீர் செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
ஆபத்தான பஸ் நிலைய கட்டிடம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் உள்ள பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து செல்லுவதினால் ஆபத்தான நிலையில் உள்ள இந்த பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்படும் ஆபத்தான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராசாத்தி, ஜெயங்கொண்டம்.
இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் வேண்டும்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், ஜெயங்கொண்டம்.