புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கீழேவிழும் வாகன ஓட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி நந்தன வயல் எதிரே புதுக்கோட்டை- ஆலங்குடி மெயின் ரோட்டில் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பள்ளமாக காணப்படுவதினால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எலும்புக்கூடான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி பெரியநாயகபுரம் கிராமத்தில் மெயின் ரோட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கியாஸ் குடோன் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், மேலபாகனூர் குடித்தெரு மயான எரிமேடை அருகே தனியாருக்கு சொந்தமான எரிவாயு கியாஸ் குடோன் உள்ளது. இந்த குடோனிலிருந்து பகல் மற்றும் மாலை நேரங்களில் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயான எரி மேடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் போது அங்கிருந்து நெருப்பு துகள்கள் பறந்து சென்று குடோன் முன்பு அடுக்கி வைக்கப்பட்டுள்ள கியாஸ் சிலிண்டர்கள் மீது பட்டு அதனால் சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதை தவிர்க்க அப்பகுதியில் இயங்கும் தனியார் கியாஸ் குடோனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அந்த குடோனை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஊரவ வளர்ச்சி உதவி இயக்குனர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை மேலபாகனூர் குடித்தெரு மயான மேடை அருகே உள்ள கியாஸ் குடோனை அங்கிருந்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதற்கு உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.