< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
15 May 2023 12:38 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்துகள் தடுக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம் வி.கைக்காட்டி வழியாக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தேளூர் பிரிவு பாதைக்கு தென்புறத்தில் சர்வீஸ் சாலையில் உயர் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அவைகளில் சில வாரங்களாக நான்கு மின்விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளது. இவ்வழியே செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் வேகமாக செல்வதால் வடபுறத்தின் வழியாக தேளூர், குடிசல் கிராமங்களுக்கு செல்லும் பொது மக்களும், தென்புறத்தில் உள்ள கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சாலை கடக்க மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. மேலும் கயர்லாபாத் போலீஸ் நிலையத்திலிருந்து விளாங்குடி வரை இந்த சாலையில் மின்வாரிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைக்காட்டி.

சேறும், சகதியுமான சாலை

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி, நாயக்கர் பாளையம் கிராமங்கள் ஆகும். முனியங்குறிச்சி கிராமத்திலிருந்து வெளிபிரிங்கியம் செல்லும் வழியில் சுண்ணாம்புக்கல் லாரிகள் வேகமாக செல்லும்போது அடிக்கடி சாலையில் சுண்ணாம்புக்கல் சிதறுகிறது. மேலும் மழை பெய்யும் போது வெளி பிரிங்கியம் கிராமம் வரை சாலை மிகவும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே பெரிய திருக்கோணத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் கீழப்பழுவூர் வழியாக கூலி வேலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் சாலையில் தேங்கியுள்ள சேறு சகதிகள் வழுக்கி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முனியன்குறிச்சி.

குரங்குகள் தொல்லை

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள காத்தான்குடி காடு கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்வதுடன் இப்பகுதியில் உள்ள பழ வகை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மின் வயர்களை பிடித்து தொங்குவதினால் அவை அறுந்து விழுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராமன், காத்தான்குடி காடு.

மேலும் செய்திகள்