< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 April 2023 6:09 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிக்கடி மின்தடை

திருச்சி கருமண்டபம், செல்வ நகர், பொன்னகர், பெரிய மிளகு பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இன்றி அவ்வப்போது மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செல்வநகர்.

கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை வட்டம் ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்து வருகிறது. ஆயினும் சமீப காலமாக நகரத்தின் முக்கிய இடங்களில் குறிப்பாக செவலூர் ரோடு, மணப்பாறை சந்தை பகுதிகளில் கொள்ளை மற்றும் வழிப்பறி, வாகனங்கள் திருட்டு அதிக அளவில் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள், குழந்தைகள் வெளியே நடமாட முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே நகரில் உள்ள முக்கிய இடங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணப்பாறை.

அகற்றப்படாத கழிவுகள்

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சந்தை கழிவுகளை அகற்றி வந்த ஊராட்சி மன்ற நிர்வாகம் கடந்த 2 வாரங்களாக உத்தமர்கோவில் பகுதியில் உள்ள சந்தை கழிவுகளை அகற்றாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அங்காளஈஸ்வரி, பிச்சாண்டார்கோவில்.

குடிநீர் குழாயில் உடைப்பு

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதி காமராஜர் வளைவு அருகில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் முழுவதும் சாக்கடையுடன் கலந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்க்கி, காமராஜர் வளைவு.

மேலும் செய்திகள்