கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உடைந்து கிடக்கும் நாற்காலிகள்
கரூர் மாவட்டம், தரங்கம்பாடி பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் பஸ் வரும் வரை அமர்வதற்கு நாற்காலிகள் அமைக்கப்பட்டது. இந்த நாற்காலிகள் தற்போது உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், தரங்கம்பாடி.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
கரூர்-ஈரோடு சாலையில் வடிவேல் நகர் உள்ளது. இந்த வடிவேல் நகர் பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளன. இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அதிகமாக கொட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இன்பராஜ், கரூர்.
சாலையில் பள்ளம்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் வழியில் பொன்னியாகவுண்டன்புதூர் முதல் அதியமான்கோட்டை பிரிவு வரை 3 இடங்களிலும், அதேபோல் கரூர் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பும் சாலையின் இடது பக்கம் தார் கலவை பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது மேடு பள்ளமாக சீரற்று உள்ள இந்த குழிகளில் இறங்கி செல்கின்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாரதிராஜா, புன்னம்சத்திரம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகர் தெரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரத்தில் ஓடி வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கிருஷ்ணன், வேலாயுதம்பாளையம்.