< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 April 2023 7:30 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பராமரிக்கப்படாத பூங்கா

திருச்சி தில்லை நகர் அறிவியல் பூங்காவிற்கு மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்காக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு உபகரணங்கள் சரியான பராமரிப்பு இன்றி சத்தம் கேட்கிறது. மேலும் போதுமான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படாமல் உள்ளதால் பெரும்பாலான குழந்தைகள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்தை அருகில் உள்ள மரக்கிளைகள் மறைத்துள்ளதால் இரவில் போதிய வெளிச்சம் இல்லை. சில இடங்களில் போதுமான மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குழந்தைகள் விளையாடும் உபகரணங்களின் அருகே போதிய இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளதால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் விளையாடும் வரை கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரூற்றும் பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதுடன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லாவண்யா, திருச்சி.

உயரமாக போடப்படும் சாலை

திருச்சி மாவட்டம், சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை காந்திபுரம் பகுதியில் போடப்படும் சாலையானது பழைய சிமெண்டு சாலையை விட உயரமாக போடப்படுகிறது. இதனால் மழைபெய்யும்போது சாலையில் விழும் மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திலீப், பெட்டவாய்த்தலை.

நோய்த்தொற்று பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாகை குளத்தில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, கண்ணுடையான்பட்டி.

மேலும் செய்திகள்