அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாதுகாப்பு இல்லாத பஸ் நிலையம்
அரியலூர் தலைநகரில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் அறிவிக்காமல் பழைய பஸ் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரியலூர் புறவழி சாலையில் வாணி மகால் எதிர்புறம் கடந்த 21-ந் தேதி முதல் தற்காலிக பஸ் நிலையம் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் திடீர் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தற்காலிக பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு எவ்வித பந்தல்களும் அமைக்கப்படவில்லை. வெட்ட வெளியாக உள்ளது. போதிய உயர் மின்விளக்குகள் இல்லை. தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் புழுதி மண்டலமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் திருட்டு நடக்கும் சூழல் உள்ளது. திடீரென மழை பெய்தால் தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியாக மாற்றம் அடைந்தால் பஸ்கள் சிக்கிக் கொள்ளும். தற்போது கோடை காலம் என்பதால் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பழைய பஸ் நிலையத்திலிருந்து தற்காலிக பஸ் நிலையத்திற்கு கடுமையான வெயிலில் நடந்தே செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாடுகளால் போக்குவரத்து இடையூறு
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் மற்றும் தேளூர் ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்டது வி.கைகாட்டி கிராமம். இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக அரியலூர் செல்லும் சாலையில் ஆங்காங்கே மாடுகள் குறுக்கும், நெடுக்குமாக நிற்கிறது. சில இடங்களில் இரவு நேரங்களில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் படுத்துள்ளதால் அரியலூருக்கு செல்லும் பஸ்கள், 108 ஆம்புலன்ஸ்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் சாலையில் படுத்துள்ள மாடுகள் திடீரென்று குறுக்கே ஓடுவதால் விபத்துக்கள் நிகழும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலை ஆக்கிரமிப்பு
அரியலூர் கீரைக்காரத்தெருவில் உள்ள சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழியாக அரசு தலைமை மருத்துவமணைக்கு செல்லும் மக்கள், 108 ஆம்புலன்ஸ்கள் பெரும் அவதியை சந்திக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அகற்றப்பட்ட வேகத்தடை
அரியலூர் மாவட்டம், சின்னவளையத்தை அடுத்த அரங்கநேரி அருகே உள்ள அரசு பள்ளியில் சுற்றுபகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பள்ளி அருகே உள்ள சாலையை கடப்பதற்கு ஏதுவாக சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் சீராக சென்று வந்தன. இந்நிலையில் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால் அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.