புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மெயின் ரோட்டில் அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில் மிகவும் பழமையான நீர்த்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராகேஷ், திருவரங்குளம்.
எலும்புக்கூடான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்திலிருந்து சூரப்பட்டி செல்லும் தார் சாலை வழியில் வயல் பகுதியில் நஞ்சை நிலங்களுக்குள் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் உள்ளது. விவசாய நிலங்களில் வேலை நடைபெறும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், மேலத்தானியம்.
கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள எம்.உசிலம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்பவர்களின் கஷ்டத்தை போக்கவும், கால்நடைகளை பாதுகாக்கவும் எம்.உசிலம்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், எம்.உசிலம்பட்டி.
வழிகாட்டி பலகையில் ஒட்டப்படும் சுவரொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், காலாடிபட்டி சத்திரம் கிராமம் பல ஊர்களின் முக்கிய சந்திப்பாகவும், பஸ் நிறுத்தமாகவும் உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் சுவரொட்டிகளை ஒட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் புதிய வாகன ஓட்டிகள் இது எந்த ஊர் என்று தெரியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கா.சத்திரம்.