< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
12 April 2023 11:12 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உயரமான வேகத்தடை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகம்பூர் கிராமத்தில் குலக்கா நத்தம் பிரிவு சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சாலை வழியாக செல்லும் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் இந்த வேகத்தடையை கடக்கும்போது சேதம் அடைந்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை உயரமாக இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், சிறுகம்பூர்.

எரியாத தெரு விளக்குகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சாத்தனூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரிவது இல்லை. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராசாத்தி, சாத்தனூர்.

குப்பைகளால் துர்நாற்றம்

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ரெங்கா நகர் பகுதியில், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்றாமல் சில நேரங்களில் தீ வைத்து கொளுத்தி விடுவதால் துர்நாற்றம் தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மூச்சு விடுவதற்கும் சிரமப்படுகின்றனர். அதில் சில நேரங்களில் பாம்புகளும் வந்து செல்கின்றன. பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பாதையில் கொட்டப்படும் குப்பைகள்

பெரம்பலூர் நகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தெற்கு தெருவில் இருந்து வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கழிவறைக்கு எதிரே உள்ள பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்தப்பகுதிக்கு யாரும் அதிகாரிகள் வந்தால் தான் அந்த குப்பைகள் அகற்றப்படுகிறது. இல்லையென்றால் குப்பைகள் மலை போல் குவிந்து வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பதாகையை வைக்கவும் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரிய தெற்கு தெரு.

மேலும் செய்திகள்