திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், டி.கல்விக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. தற்போது வரை சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வரும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வினோத், டி.கல்விக்குடி.
பஸ் வசதி வேண்டும்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில் போக்குவரத்து செறிவு அதிகம் கொண்டது துறையூர் தாலுகா ஆகும். துறையூர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும் புறநகர் பஸ் சேவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் துறை பஸ்கள் மூலமும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களுக்கு திருச்சியை அடுத்து துறையூரில் இருந்து மட்டுமே நேரடி பஸ் சேவை உள்ளது. பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 2 இடங்களில் திருச்சி மண்டலத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் 2 பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய துறையூர் நகரில் இருந்து முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூர் செல்வதற்கு நேரடி பஸ் சேவை இன்று வரை இல்லை. துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் துறையூரில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சென்று பின் திருச்செந்தூர் செல்ல வேண்டி உள்ளது. குறைந்தபட்சம் 4 பஸ்கள் ஏறி இறங்க வேண்டி உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள் ஆகியோர் துறையூரிலிருந்து திருச்செந்தூர் செல்வதற்கு அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே தினமும் இரவு 9.30 மணிக்கு துறையூரில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து, புறநகர் பஸ் சேவையை அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன் நடேசன், துறையூர்.
தெருநாய்கள் தொல்லை
திருச்சி விமான நிலைய பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் விமான பயணிகளை கடிக்க வரும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரதீப், திருச்சி விமான நிலையம்.
அப்புறப்படுத்தப்படாத கழிவுகள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தமர்கோவில் பகுதியில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வந்தது. சந்தை கழிவுகளை சுத்தம் செய்து வந்த பிச்சாண்டார் கோவில் ஊராட்சி நிர்வாகம் தற்போது செய்யாததால் அழுகிய நிலையில் உள்ள காய்கறிகள், குப்பைகள் மூலம் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. பிச்சாண்டார் கோவில் ரெயில் நிலையம் செல்லும் பயணிகள், பிரசித்தி பெற்ற உத்தமர்கோவில் செல்லும் பக்தர்கள், அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் என பலர் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக சந்தை கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விக்னேஷ்வரன், உத்தமர்கோவில்.