< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 April 2023 7:14 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, நகரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நகரப்பட்டியில் இருந்து வடக்கிப்பட்டி, வடகாடு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவில் தெரு விளக்கு இல்லாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாண்டியன், நகரப்பட்டி.

சீரமைக்கப்படாத வடிகால் வாய்க்கால்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் வானொலி மன்றத்திலிருந்து ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், அரசு பள்ளிகள், கடைவீதி செல்லும் தார்ச்சாலை உடைந்து பல ஆண்டுகளாக மராமத்து செய்யப்படாத நிலையில் சில இடங்களில் சாலையோர வடிகால் வாய்க்காலில் தென்னை மட்டைகளை கொட்டி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் கூட அந்த பகுதி வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் மேலும் மேலும் தென்னை மட்டைகள் கொட்டி வாய்க்கால் தூர்ந்து மட்டைகள் சாலையை அடைக்கிறது. இதனால் விஷப் பாம்புகள் ஏராளம் மட்டைகள் கிடக்கும் வடிகால் வாய்க்காலில் வெளிப்படுவதால் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பெரும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இந்த சாலையோர வடிகால் வாய்க்காலை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

கால்நடைகளுக்கு பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை உலர் தீவினமான வைக்கோல் விற்பனையில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைக்கோல் கட்டுகள் அனைத்தும் தற்போது கையால் அறுக்க முடியாத அளவிற்கு நூல்களால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதால் வைக்கோல் வாங்கும் கால்நடை வளர்போர் இத்தகைய கூல கட்டுகளால் கைகளில் காயம் ஏற்பட்டு வருவதுடன் கால்நடைகளின் கழுத்து மற்றும் கால்களில் நூல் பட்டு கால்நடைகளின் உயிருக்கு கூட ஆபத்து உண்டாகும் சூழல் நிலவி வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு கூட ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் இத்தகைய நூல்களால் வைக்கோல் கட்டுகள் கட்டுவதை தவிர்த்து இலகு ரக சணல்களை பயன்படுத்தி வைக்கோல் கட்டுகளை கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள், வடகாடு.

மேலும் செய்திகள்