திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்திற்கு இடையூறான மின் கம்பங்கள்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது புத்தனாம்பட்டி. இங்கு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, கலை அறிவியல் கல்லூரி, மின்சார வாரிய அலுவலகம், துணை மின் நிலையம், திருமண மண்டபங்கள் போன்றவை இருக்கிறது. மேலும் முசிறி, துறையூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருப்பட்டூர் பிரம்மா கோவில் செல்வதற்கு புத்தனாம்பட்டி வழியாகத்தான் சென்று வருகிறார்கள். வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்காக தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புத்தனாம்பட்டியில் இருக்கும் மாவட்ட இதர சாலையானது விரிவாக்கம் செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலையை ஒட்டியும் விரிவாக்கம் செய்யப்படும் சாலையின் நடுவிலும் மின் கம்பிகளை சுமந்து செல்லும் மின்சார கம்பங்கள் உள்ளன. புதிதாக விரிவாக்கம் செய்யும் சாலைக்கு வெளியே இந்த கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாததால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் செய்யும் பணியானது தாமதமாகி வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி புத்தனாம்பட்டி கிராமத்தில் விரிவாக்கம் செய்யும் சாலையில் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை அகற்றி மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், புத்தனாம்பட்டி.
சாலையில் பள்ளம்
திருச்சி மாவட்டம், பூவாளூர் சிதம்பரம் நான்கு வழி சாலை அருகே மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வகான ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் சென்று கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுதாகர், திருச்சி.
நோய் தொற்று பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, புங்கனூர் கிராமம், புதுத்தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் விசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சூர்யா, புங்கனூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள மேரிஸ் நகர், தென்றல் நகர் பகுதியில் ஓடும் கழிவுநீர் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன், மேரிஸ் நகர்.
அகற்றப்படாத ஆகாய தாமரைகள்
திருச்சி மாவட்டம், மேலணை வாத்தலை என்ற ஊரில் இருந்து விவசாய பாசனத்திற்காக கடந்த 1959-ம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 59 கிலோ மீட்டர் நீளமுள்ள புள்ளம்பாடி வாய்க்கால் செல்கிறது. இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் அருகே ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் முளைத்துள்ளது. இதனால் தண்ணீர் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொன்சேகர், வாத்தலை.