கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்கு
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற் குடை அருகே தெருவிளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புலியூர் வையம்பட்டி சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் பாலப்பட்டி, பொம்மணத்துப்பட்டி, பொரணி, தேவச்சி கவுண்டனூர், சீரங்கம்பட்டி, அய்யம்பாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து, இரவு, பகல் என எந்நேரமும் பஸ் ஏரி, இறங்கியும் செல்கின்றனர். இரவு நேரங்களில் இவ்வாறு பஸ் ஏறி, இறங்கி செல்லும் போது மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக எரிந்து வந்ததெரு விளக்கு கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இங்கு வந்து பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்தப் பகுதியில் அதிகப்படியான மது பிரியர்கள் சாலை ஓர பாறைகளிலும், மானாவரி நிலங்களிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் சில மது பிரியர்கள் நிழற்குடையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் எரியாத தெருவிளக்கை உடனடியாக சரி செய்து இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி அந்த பகுதியில் நடமாட வழிவகை செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், பாலப்பட்டி.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வேண்டும்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் மலைக்கோவில் அருகிலேயே உள்ள பாரதிநகர், காந்திநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பாரதிநகர்.