புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சரிசெய்யப்படாத எச்சரிக்கை விளக்கு
ராமேஸ்வரத்தில் இருந்து திருமயம் வழியாக திருச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்சமயம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமயம் நகருக்குள் செல்லும் சாலை பிரிவில் தாமரைக்கண்மாய் அருகே உள்ள எச்சரிக்கை மின்விளக்கு உடைந்து சாய்ந்துள்ளது. தற்போது எச்சரிக்கை விளக்கு எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு சரி செய்து கொடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரஞ்சிதா, திருமயம்.
தொற்று நோய் பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருணாச்சல காவிரி வடிகால் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தண்ணீர் செல்லாமல் கழிவுநீர் கலந்து சாக்கடையாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்கள் அருணாச்சல காவிரி வடிகால் வாய்க்காலில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜுவ்காந்தி, மணமேல்குடி.