பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத மின் விளக்குகள்
துறையூர்- பெரம்பலூர் சாலையில் லாடபுரம் பிரிவுச்சாலையில் நிழற்குடைகள் அருகருகே 5 சூரிய ஒளி மின்விளக்குகள் அமைக்கப்பட்டு நன்கு எரிந்தது. சாலை திறக்கப்பட்டு சில மாதங்களில் 5 மின் விளக்குகளும் பழுது ஏற்பட்டதால் அவற்றை கழட்டிவிட்டு மீண்டும் பொறுத்தவில்லை. இதனால் அங்கு இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்களும், விபத்துகளும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தேவா, லாடபுரம்.
சுத்தம் செய்யப்படாத கிணறு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை அங்கன்வாடி மையம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் பொதுமக்களுக்கு தெரு குழாய்கள், வீட்டு குழாய் மூலமாக குடிநீா் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த கிணற்றின் உட்புறத்தில் தண்ணீரில் மேல் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் கிணற்றில் படர்ந்துள்ள பாசியை அகற்றி தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கண்ணன், நாட்டார்மங்கலம்.