< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 March 2023 11:32 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கிடப்பில் போடப்பட்ட பணி

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது மு.புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வி. கைகாட்டி செல்லும் சாலையின் மேற்கு புறத்தில் மங்கட்டான் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் அருகிலுள்ள கிராமங்களின் ஆடு, மாடுகள் மேய்ந்த பிறகு மதிய நேரத்தில் தண்ணீர் குடித்து இளைப்பாறும். இந்த ஏரியின் கரைகளுக்கு போதிய அளவு தடுப்பு சுவர் பாதுகாப்பு இல்லை. மேலும் மு. புத்தூரில் இயங்கும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து அரியலூருக்கு 24 மணி நேரமும் டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்பு கல் லாரிகள் மின்னல் வேகத்தில் எடுத்து சென்று வருகிறது. இப்பகுதியின் சாலை மிகவும் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி விபத்து நிகழும் பகுதியாக இருந்து வருகிறது. எனவே இந்த ஏரிக்கரை முழுவதும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு தென்புற பகுதியில் இருந்து ஏரியின் நடுப்பகுதி வரை பாதியளவு மட்டும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பிறகு ஏரியின் நடு பகுதியில் இருந்து வடக்கு பகுதி முடிவு வரை இதுநாள் வரை தடுப்புச்சுவர்கள் அமைக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மின்னல் வேகத்தில் செல்லும் சுண்ணாம்புக்கல் லாரிகள் ஏரியினுள் விபத்துகள் ஏற்பட்டு லாரிகள் தலை கீழாக கவிழும் அபாய நிலை உள்ளது. இந்த ஏரி அருகே அடிக்கடி விபத்து நிகழும் மோசமான பகுதியாகும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சேலத்தார்காடு.

மாணவர்கள் அச்சம்மாணவர்கள் அச்சம்

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஒரே வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி பள்ளி ஆகியவைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் 3, 4, 6-ம் வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளின் சுற்று சுவருக்கு வடபுறத்தில் நீண்ட நாட்களாக பழுதடைந்து செயல்படாமல் மகளிர் சுகாதார வளாகம் ஒன்று பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தினை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து பள்ளியின் சுற்றுச்சுவர் மீது படர்ந்துள்ளது. மேலும் சுகாதார வளாகம் பகுதியில் நிரந்தரமாக கழிவுநீர் செல்லும் வாய்க்கால் ஒன்று உள்ளது. இதில் அதிக அளவில் விஷப்பூச்சிகள், பாம்புகள் ஆகியவைகள் குடியிருந்து வருகின்றன. சில சமயங்களில் பள்ளி வகுப்பறையினுள் பாம்புகள் நுழைந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் பயின்று வருகின்றனர். மேலும் சுகாதார வளாகத்தின் மேற்கு பகுதி வழியாக ஆடு, மாடுகள் பள்ளிக்குள் நுழைந்து அங்குள்ள பல்வேறு பூச்செடிகளை கடித்து தின்று விடுகிறது. இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்கள், முனியங்குறிச்சி.

மேலும் செய்திகள்