கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் ஊராட்சி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள ஆடுகள், கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முத்து மாரியப்பன், நன்செய் புகழூர்.
உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் சந்தைப்பேட்டை அருகில் கணக்குப்பிள்ளை புதூர் செல்லும் பிரிவில் உள்ள மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து முறிந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சந்தைப்பேட்டை.