புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவறை இன்றி பயணிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள செங்குளம் பஸ் நிலையத்தில் பொது கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், மாணவ-மாணவிகள் மற்றும் அருகில் உள்ள சிறு வியாபாரிகள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.
தெருநாய்களால் மக்கள் அச்சம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி பழைய கடை வீதி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க வருவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கோழி, ஆடுகளை கடித்து குதறுகின்றன. கடந்த 20-ந் தேதி மட்டும் இப்பகுதியில் 3 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முகமது இலியாஸ், அன்னவாசல்.