< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 Feb 2023 5:32 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பொதுமக்கள் அச்சம்

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ளது இந்திராநகர். இப்பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்கு புறத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் பழமையான மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் காற்றில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதி வழியாக ராவுத்தன்பட்டி பகுதிக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். மேற்படி மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் நடந்து செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பிச்சை பிள்ளை, இந்திரா நகர்.

கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் சேதமடைந்த நெல் வயல்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் வானதிரையன்பட்டினம் செல்லும் வழியில் சாலையோரத்தில் கோடாலி கருப்பூர் முதல் உடையார்பாளையம் வரையிலான உடையார்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. வானதுறையன்பட்டினம் பகுதியில் அந்த குழாயில் ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள நெல் வயல்களில் கசிவதால் அந்த வயல்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையில் விவசாயம் செய்தபோதிலும் தற்போது அறுவடை நேரத்தில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து விட்டது. தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய அதற்கான அறுவடை எந்திரத்தை பயன்படுத்தும்போது அதிக செலவு ஏற்படும். மேலும் அதிகப்படியான நெல்மணிகள் வயலிலேயே வீணாகும். விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய வைக்கோல் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்புடைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்து அந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் உடனடியாக அந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

ராஜாராமன், வானதிரையன்பட்டினம்.

மேலும் செய்திகள்