திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மேய்க்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பழைய காட்டுப்புத்தூர் சாலையில் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் காலி பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர். மேலும் சாலையிலேயே மதுபாட்டில்களை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நோய் தொற்று பரவும் அபாயம்
திருச்சி மாநகராட்சி பெரிய மிளகுபாறை புத்தடிமாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வாருவதுடன், இரவு நேரத்தில் இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான பயணிகள் நிழற்குடை
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேக்குடி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த நிழற்குடையை தாங்கி நிற்கும் தூண் முற்றிலும் உடைந்த நிலையில் காணப்படுவதால் மழை பெய்யும்போது, இந்த நிழற்குடையில் ஒதுங்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அமர்ந்திருக்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியாவூர் பகுதியில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொது பாதைக்கு நடுவே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. மின்கம்பிகள் தாழ்வாக செல்வதினால் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதேநிலை நீடித்தால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையில் பள்ளம்
திருச்சி மாவட்டம், முசிறி முதல் தோளூர்பட்டி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.