கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேவையற்ற கம்பங்கள்
கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் சாலையோரத்தில் தேவையற்ற நிலையில் 2 கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்கள் தற்போது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது, பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கம்பங்கள் கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள் அவதி
கரூர் மாவட்டம் க.பரமத்தி, தென்னிலை, குப்பம், புன்னம்சத்திரம், உப்புபாளையம், புன்னம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களை எந்திரம் மூலம் அரைத்து செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த செயற்கை மணல்கள் கரூர், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளில் கொண்டு செல்லப்படும் செயற்கை மணல்கள் அதிகளவு கொண்டு செல்வதால் லாரிகள் வேகமாக செல்லும்போது லாரியின் மட்டத்திற்கு மேல் உள்ள மணல்கள் காற்றில் பறக்கின்றன. இதனால் லாரியின் பின்னால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதிலமடைந்த மின்கம்பம்
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், இனுங்கூர் ஊராட்சிமேல சுக்காம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிரமத்தை ஏற்படுத்தும் மயான கொட்டகை
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி, பெரியபனையூரில் உள்ள அம்பேத்கர் நகரில் சுமார் 150-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் தனியாக சிமெண்டு ஆஸ்பெட்டாஸ் மூலம் சிறிய மயான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயான கொட்டகை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் ஓடுகள் உடைந்துள்ளதால் மழைபெய்யும்போது இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சீரமைக்கப்படாத சாலை
கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. புகழூர் வாய்க்காலுக்கும், காவிரி ஆற்றுக்கும் இடையே விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயிகள் பல்வேறு பணப்பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். விவசாய பயிர்களுக்கு தேவையான உரங்களை விவசாயிகள் வாகனங்களில் கொண்டு சென்று வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி புகழூர் வாய்க்கால் மேட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலை வழியாக விவசாயிகள் இடுப்பொருட்களையும், விளைபொருட்களையும் கொண்டு சென்று வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றுக்கு இந்த வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக தார் சாலை நெடு கிலும் சிதிலமடைந்த காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.