< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
25 Jan 2023 11:52 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எலும்பு கூடான மின்கம்பங்கள்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கூடலூர் ஊராட்சி நாட்டார்கோவில்பட்டி மெயின் ரோட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் 5 மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கரூர் மாவட்டம், காகிதபுரம் மின்சார நிலைய அலுவலகம் எதிரில் உள்ள சாலை, மண் சாலையாகவும், குண்டு, குழியுமாகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி சாலையை பெயர்த்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் 6 மாதங்கள் ஆகியும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேதமடைந்த தடுப்புகள்

கரூர் மாவட்டம், வாங்கல் செல்லும் மெயின் சாலையில் குப்பைக்கிடக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடிங்கில் கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த குப்பை கிடிங்கில் கொட்டப்படும் குப்பைகள் பறந்து சாலையில் விழுக்கூடாது என குப்பை கிடங்கை சுற்றி தகரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தடுப்புகள் உடைந்து குப்பைகள் சாலையில் பறந்து விழுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லாரிகளால் தொடரும் விபத்துகள்

சமீப காலமாக அரவக்குறிச்சி நகர பகுதிக்குள் தேவையில்லாத சரக்கு லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு சிமெண்டு லோடு ஏற்றி செல்லும் லாரிகள் அரவக்குறிச்சி நகரப் பகுதியில் வந்து செல்கின்றன. அரவக்குறிச்சி நகரப் பகுதியில் குறிப்பிட்ட லாரிகள் அதிவேகமாக செல்கிறது. இதனால் சிறு சிறு விபத்துக்கள் நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் போலீஸ் ஏட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோல் விபத்து நடக்காமல் இருக்க தேவையில்லாமல் அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் வரும் லாரிகளை மாற்றுப் பாதையில் திருப்பிவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி நடையனூரில் சாலையோரம் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் அருகில் உள்ள வீடுகளில் வசிப்போர் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களை நியமித்து குப்பைகளை வாங்கி வந்தனர். தற்போது தூய்மை பணியாளர்கள் அருகில் உள்ள தெருக்களில் வாங்கும் குப்பைகளை குப்பை தொட்டி அருகில் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்