புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற அடிபம்புகள்
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தி சக்கரான்குளம் ரேசன்கடை அருகே அடிபம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் இதேபோல் பல இடங்களில் பயனற்று சேதமடைந்த நிலையில் அடிபம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தரைப்பாலத்தில் பள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் செட்டிகுளம் தரைப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குரங்குகள் தொல்லை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு குரங்குகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவை நோளிகளின் உணவு பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதுடன் அவர்களை கடிக்க வருகிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முடிவுபெறாத சாலை பணி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து கீரமங்கலம் செல்லும் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதில் குளமங்கலம் தெற்கு கிராமத்திலிருந்து ஆவணத்தான்கோட்டை வரை நடந்து முடிந்த சாலை பணியில் மின் கம்பங்களுக்காக பல இடங்களில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகும் விடுபட்ட சாலை பணிகள் முழுமையாக நடக்காததால் பெரிய பள்ளங்களாகி வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எலும்பு கூடான மின்கம்பங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அண்ணாமலை அவென்யூ குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில் இப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் தங்களின் வீடுகளில் கால்டைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது இப்பகுதியில் உள்ள மாடுகளுக்கு அம்மை நோயின் அறிகுறிகள் தென்பட்டு வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் கவலைப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.