கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீட்டுமனை பட்டா வழங்கப்படுமா?
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி, முத்தனூரில் தார் சாலை அருகே சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். அனைவரும் கூலி தொழிலாளர்கள். இங்கு குடியிருப்பவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக தங்களது வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல்வேறு வருவாய் துறைகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
கரூர் மாவட்டம், காகிதபுரம் மின்சார நிலைய அலுவலகம் எதிரில் உள்ள சாலை, மண் சாலையாகவும், குண்டு, குழியுமாக இருந்த இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட பணி 6 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆற்றில் முளைத்த கோரை புற்கள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள நங்காஞ்சி ஆற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு அந்த வழியாக தண்ணீர் செல்கிறது. தற்போது காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் தரைமட்ட பாலம் பகுதியில் அதிகளவு கோரைப்புற்கள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும்போது இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று விடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலையிலிருந்து புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
சுற்றுச்சுவர் இல்லாத கோவில்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 18 பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான கோவில். கோவிலின் திருவிழா வருடா வருடம் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல்- வேலாயுதம்பாளையம் தார்சாலை அருகில் கோவில் கட்டப்பட்டிருந்தது. தார் சாலை ஓரத்தில் கட்டப்பட்டிருந்ததாலும், கோவில் சிதிலமடைந்ததாலும் இக்கோவிலை இடித்து விட்டு அருகாமையில் புறம்போக்கு நிலத்தில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் மிகுந்த சிரமங்களுக்கிடையே நீண்ட வருடங்களாக உருவாக்கப்பட்டது இக்கோவில். ஆனால் கோவில் கட்டப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் இக்கோவிலுக்கு இல்லை. கோவிலின் சிற்பங்கள், சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.