புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் தண்ணீர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி நிரம்பி அடிக்கடி தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அந்த தண்ணீர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிழற்குடையில் அமர்ந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் இந்த நிழற்குடையில் அமர்ந்து இருக்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், கோமங்கலத்தில் இருந்து திருச்சி மாவட்டம், இனாம் மாத்துருக்கு செல்லும் சாலை ஓரத்தில் காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இதில் கோமங்கலம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது. வெளியேறி வரும் தண்ணீரானது சாலையின் நடுவே தேங்கி நிற்பதால் சாலை சேதமடைந்து இருப்பதுடன் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கோமங்கலம் அருகே காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட் டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குரங்குகள் தொல்லை
புதுக்கோட்டை நம்பம்பட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்வதுடன், வீட்டில் உள்ள பொருட்களை கீழே தள்ளிவிட்டுவிட்டு சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பன்றிகளால் சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.