பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துவிட்டது. இந்த நிலையில் அந்த சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படாமல் உள்ளதால் சமூக விரோதிகள் விடுதிக்குள் புகும் நிலை உள்ளது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முறையாக உணவு வழங்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் கர்ப்பிணிகளுக்கு தனி கவனம் செலுத்தி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது மருத்துவ பரிசோதனை- சிகிச்சை தாமதமாகும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மதியம் உணவு சுகாதார நிலையங்களிலேயே வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒரு சில சுகாதார நிலையங்களில் தாமதமாகும் கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு முறையாக வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் அந்த கர்ப்பிணிகள் பசியுடன் வீடு திரும்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவ்வாய்க்கிழமையில் மருத்துவ பரிசோதனை-சிகிச்சை தாமதமாகும் கா்ப்பிணிகளுக்கு முறையாக இலவச மதிய உணவு வழங்கப்படுகிறதா? என்பதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கிடப்பில் போடப்பட்ட பணி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் மயானக் கொட்டகை அமைக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவொரு முதற்கட்ட பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மழைபெய்யும்போது இறந்தவர்களின் உடலை எரியூட்ட பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குரங்குகள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் 4-வது வார்டு பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றுவிடுகின்றன. மேலும் குழந்தைகளை குரங்குகள் கடிக்க வருவதால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான மின்மாற்றி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு பழைய விராலிப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதனை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.