அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் கிராமம் பஸ் நிலையத்திலிருந்து காலனி தெருவிற்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பராமரிக்கப்படாத கழிவறை
அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் நலன் கருதி இப்பகுதியில் இலவச கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாடிக்கையாளர்கள் அவதி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தலைமை அஞ்சலகத்தில் ஏராளமான மக்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்த அஞ்சலகத்தில் சில நேரங்களில் காலை 9.30 மணி வரை பதிவு தபால் கவுண்டரில் யாரும் இருப்பதில்லை. இதனால் காலை நேரத்தில் அஞ்சல் அலுவலகத்திற்கு வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கொசு தொல்லை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அய்யனார் கோவில்- சிதம்பரம் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த குழாய் சாலையின் அடியில் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.