கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற பயணிகள் நிழற்குடை
கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் ஆசாரிப்பட்டறை என்ற ஊர் உள்ளது. இப்பகுதி பயணிகளின் நலன் கருதி அங்கு நிழற்குடை கட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் இந்த நிழற்குடையில் அமர்ந்திருந்து அவர்கள் செல்லும் ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக இந்த நிழல்குடை அருகே எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விபத்து அபாயம்
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், தென்னிலை, பரமத்தி, குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கல்குவாரிகள் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் குழி தோண்டப்பட்டு கற்கள் வெட்டப்பட்டு வருகிறது. பல கல்குவாரிகள் அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி அளவுக்கு அதிகமாக ஆழத்தில் உள்ள கல்குவாரிகளில் வாகனங்கள் விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான தார்சாலை
கரூர் மாவட்டம், நத்தமேட்டில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை நெடுகிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச் சாலையில் மளிகை கடைகள், பேக்கரிகள், காய்கறிகடைகள், பலகார கடைகள், கோழிக் கறி விற்பனை செய்யும் கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு வகையான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும், பிளாஸ்டிக் கப்புகளையும், கோழிக் கழிவுகளையும் கடைக்காரர்கள் கொண்டு வந்து நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே கொட்டி வருகின்றனர். இதனால் தொடர்ந்து துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையில் பள்ளம்
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பஸ் நிலையம் அருகில் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் நிலைதடுமாறி செல்வதுடன், சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.