< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
11 Dec 2022 6:44 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கு சென்று வருகிறார்கள். பக்தர்கள் அனைவரும் திருச்சியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று பின் அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று தான் சென்று வருகிறார்கள். திருச்சியிலிருந்து சதுரகிரி செல்வதற்கு இன்று வரை சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக குழந்தைகள், கைக்குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் வயதானவர்கள் என அனைவரும் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சதுரகிரி மலை பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். நேரடி பஸ் சேவை வசதி இல்லாத காரணத்தால் பக்தர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி வேண்டும்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து துறையூர், கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி, சேலம் வழியாக பெங்களூருக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பல பஸ் மாறி மாறி பயணம் செய்து வருகின்றனர். இதனால் பண விரயம் மற்றும் கால விரயம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெங்களூருக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதுப்பிக்கப்படாத சாலை

திருச்சி மாவட்டம், வைரிசெட்டிபாளையம் மேற்கு குறும்பத் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை இன்றளவும் புதுப்பிக்கப்படவில்லை. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் சாலையில், கழிவுநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் மழை காலங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் பலனில்லாததால், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி தெற்கு காட்டூர் பாரதியார் தெரு, பர்மா காலனி, பெல் கூட்டுறவு வங்கி, பரம ஹம்ஸா பெல் பள்ளிக்கூடம் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், இப்பகுதியில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போது கழிவுநீர் செல்ல வழியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமா?

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கோவாண்டகுறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானவர்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு தட்டம்மை நோய் பரவி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கோவாண்டகுறிச்சி பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெளியே நடமாட மக்கள் அச்சம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், மலைக்கோவில் தெற்கு, மாரீஸ் நகர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலும், தனிநபர் வசம் உள்ள வீட்டுமனையிலும் ஏராளமான கருவேல மரங்கள், செடி-கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இவற்றில் இருந்து விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் இரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள சாலையில் நடக்க பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத தெருவிளக்குகள்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் கிராமம் முத்தமிழ் புற தெருவில் கடந்த 3 மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்