< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 Nov 2022 6:34 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் தார் சாலையின் ஓரத்தில் புங்கோடை அருகே விவசாய நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த மின் கம்பத்தின் வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் வலுவிழந்து மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு சணப்பிரட்டி ஆர்.எஸ்.புதூர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போது பெய்த மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையை ஆக்கிரமித்த செடி-கொடிகள்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்கால் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், நத்தமேடு, திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், என். புதூர் வரை செல்கிறது. இந்நிலையில் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் வாகனங்கள் சென்றுவர நெடுகிலும் மண் சாலை அமைக்கப்பட்டது. அந்த மண் சாலை வழியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்களது வாகனத்தை பல்வேறு பணிகளுக்காக ஓட்டிச்சென்று வந்தனர். அதேபோல் விவசாயிகள் தங்களது இடு பொருட்களையும், விளைபொருட்களையும் வாகனங்களில் கொண்டு சென்று வந்தனர். இந்நிலையில் வாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள மண் சாலை நெடுகிலும் இருபுறமும் பல்வேறு வகையான செடி -கொடிகள் முளைத்து மண் சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக எந்த வாகனமும் இந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் டீக்கடைகள், மளிகைக்கடைகள், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்த சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இப்பகுதியில் தார் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பூட்டிக்கிடக்கும் சேவை மையம்

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகரில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் விவசாயிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் இந்த சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் இங்கு கட்டிடம் கட்டுப்பட்டு பல ஆண்டுகளாகியும் சேவை மையம் தனது சேவையை துவங்காமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்