< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Oct 2022 6:52 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கரூர் மாவட்டம், நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக சாலையில் இருபுறமும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களின் காரணமாக இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரவுண்டானா அமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் கரூர்- ஈரோடு செல்லும் சாலையில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள், பல்வேறு வகையான லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- புன்னம் சத்திரம் சாலை வழியாக காகித ஆலையில் இருந்து பல்வேறு வகையான வாகனங்கள் காகித நூல்கள் மற்றும் பேப்பர்களை ஏற்றிக்கொண்டு வருகின்றன. அதேபோல் பல்வேறு பகுதியில் இருந்து பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்று வருகின்றன. எனவே வேலாயுதம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புன்னம் சத்திரத்தில் காகித ஆலை பிரிவு சாலை உள்ள பகுதியில் ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாய்ந்த மின்கம்பம்

கரூர் மாவட்டம், வெள்ளியணையிலிருந்து விஜயபுரம் செல்லும் சாலையில் கரூர்- திண்டுக்கல் ரெயில்வே மேம்பாலம் அடியில் சமத்துவபுரத்திற்கு செல்லும் சாலை பிரிவு பகுதியில் மின்கம்பம் ஒன்று நடப்பட்டு அதில் தெருவிளக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மின்கன்பம் தற்போது ஒருபுறமாக சாய்ந்து உள்ளது. இது கனமழையுடன் காற்று வீசும் போது முற்றிலும் கீழே சாய்ந்து விழுந்து சாலையில் செல்வோர்க்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாய்ந்து விழும் நிலையிலுள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் நட்டு அதில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கால்வாய்

கரூர் மாவட்டம், நடையனூர் அருகே இளங்கோநகர் வெள்ளதாரை பகுதியில் விவசாய நிலங்களில் பாய்ச்சப்படும் தண்ணீர் வெளியேறி செல்லும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. அந்த கால்வாய் மூலம் உபரிநீர் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் உபரி நீர் கால்வாயில் நெடுகிலும் ஏராளமான செடி, கொடிகள், சம்புகள் முளைத்து கால்வாயில் தங்குதடையின்றி உபரிநீர் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உபரிநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வரவணை கிராமம் வரவணை வடக்கு தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்த சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதில் புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

கரூர் மாவட்டம், குளித்தலையில் ஏழைகளின் பசியை தீர்க்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் இங்கு உணவு அருந்த வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்