< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 Oct 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுபான கடை வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் உள்ள மதுபான கடையை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும். இந்த மதுபான கடையில் இருந்து 250 மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 200 மீட்டர் தூரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காளியம்மன் கோவிலும், சுமார் 400 மீட்டர் தூரத்தில் விஸ்வநாதர் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு மதுபான கடை அமைந்துள்ளதால் அனைத்து நேரமும் அப்பகுதி மது பிரியர்கள் கூட்டத்தால் பரபரப்பாகவே உள்ளது. இந்த பகுதியை பள்ளி மாணவ- மாணவிகள் கடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் அருகில் மதுபான கடை அமைந்துள்ளதால் கிராம நிர்வாக அலுவலர் பார்க்க வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் இதனால் பாதிப்படைகின்றனர். எனவே சுத்தமல்லி பிரிவு சாலையில் அமைந்துள்ள மதுபான கடையை வேறு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு கோழி இறைச்சி கடைகளில் சேகரிக்கப்படும் கோழி இறக்கைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ஆண்டிமடம்- ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் கோழி இறைச்சிக் கழிவுகளை சாப்பிட வரும் நாய்கள் சாலையின் இரு புறங்களிலும் திடீர் திடீரென ஓடுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே கோழி இறைச்சி கழிவுகளை இறைச்சி கடை உரிமையாளர்கள் பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்கம்பிகளில் விழும் தென்னைமட்டைகள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கூத்தங்குடி காளியம்மன் கோவில் அருகிலுள்ள வீதியில் தென்னைமரத்தினால் மின்கம்பிகளில் தென்னைமட்டைகள், பாலைகள் போன்றவைகள் விழுவதினால் மின்கம்பிகள் ஒன்றுடன் உரசி மின்பொறி ஏற்பட்டு பொதுமக்கள் மேல் விழுகிறது. இதனால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்து ஏதேனும் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்படுமா?

அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு திடீரென பணத் தேவை ஏற்படும்போது, அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியலூர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மது பிரியர்களின் கூடாரமாக மாறிய நடைப்பாதை

அரியலூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள வண்ணான் குட்டையை தூர்வாரி கறைகள் பலப்படுத்தப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது மதுப்பிரியர்கள் மது அருந்தும் கூடாரம்போல் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் மக்கள் நடைபயிற்சி செல்லவோ அல்லது அமர்ந்திருக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்