< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 Sep 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகள் தவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என போலீசார் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூர் பகுதிகளில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சின் எதிரொலியாக இவ்வாறு அறுவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடுவழியில் பெட்ரோல் இல்லாமல் திடீரென நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பாட்டில் மற்றும் கேன்களில் டீசல், பெட்ரோல் வாங்கி மரம் வெட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் மரம் வெட்டும் தொழிலை மேற்கொள்ள முடியாது சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின் அளவீடு மீட்டர் பற்றாக்குறையால் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சியும், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சியுமாகும். இங்கு தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரத்தை அளவிடும் மீட்டர் தொடர்ந்து பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இதனால் புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தவர்கள் மின் இணைப்பு கிடைக்காமல் 1 மாதங்களாக காத்து வருகின்றனர். ஆகையால் இது சம்பந்தமான அதிகாரிகள் கோட்டைப்பட்டினம் கொடிக்குளம் மின் நிலையத்திற்கு கூடுதலாக மீட்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, பெருங்குடி பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு நல்லிபட்டிக்கு மேனாம்பட்டி வழியாக காலை 8 மணிக்கும் மாலை 4.45 மணிக்கும் மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மற்ற நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் மேனாம்பட்டி, இன்னாசியார்புரம், தெற்கு நல்லிபட்டி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத குளம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட செல்லுகுடி கிராமத்தில் உள்ள செங்குளத்தில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் குளம் தூர்ந்துபோன நிலையில் மழைநீரை சேகரிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தில் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி செங்குளத்தை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உணவின்றி தவிக்கும் முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் தர்கா பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையில் கடந்த 2 மாதங்களாக முதியவர் ஒருவர் பராமரிப்பு இன்றி வசித்து வருகிறார். தினமும் இவர் தண்ணீர் உணவு இன்றி தவித்து வருகிறார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்