< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Sep 2022 5:44 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆதிச்சனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை கிராமம் கீழத்தெருவிற்கு கிழக்கே உள்ள மயான கொட்டகை செல்வதற்கு பாதை இல்லாமல் குண்டும், குழியுமான பாதையில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது இப்பாதை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார்பாயால் மூடப்படாமல் எடுத்து செல்லப்படும் மண்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக பொன்னேரி மற்றும் பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு கனரக லாரிகளில் எடுத்து வருகின்றனர். இந்த கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் மண்கள் , கனரக வாகனங்களுக்கு பின்னால் செல்லும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மண் துகள்கள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கனரக வாகனங்களில் மண் எடுத்து செல்லும் லாரிகளில் தார்பா போட்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள சுவற்றில் பல்வேறு வகையான விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்டிருந்தது. சில நேரங்களில் விளம்பரப்பதாகைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழும் சூழல் உள்ளது என்றும், சாலை ஓரங்களில் நின்று கொண்டு கால்நடைகள் பதாகைகளை தின்று வருவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சுவரொட்டிகளை அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

விபத்துகள் ஏற்படுத்தும் சாலை விரிவாக்க பணி

அரியலூர் முதல் செந்துறை வரையுள்ள குறுகலான சாலையில் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் மற்றும் சிமெண்டு மூட்டைகள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பலர் இறந்துள்ளனர். இதுநாள் வரை தொடர்ந்து விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சில வாரங்களாக அரியலூர் புறவழி சாலையில் உள்ள குரும்பன் சாவடியிலிருந்து செந்துறை வரை சாலை விரிவாக்கம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை விரிவாக்க பணிகளால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை விபத்துகள் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள சுண்ணாம்புக்கல் மற்றும் மணல்களை அகற்றவில்லை. கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் செந்துறை சாலை முழுவதும் புழுதி மற்றும் புகை மண்டலமாக உள்ளது. இதனால் சாலையில் தேங்கியுள்ள மண்கள் காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்தக்காயங்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் முதல் செந்துறை வரை செல்லும் முதன்மை சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலையில் மாவட்ட விளையாட்டு திடல் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவை அமைந்துள்ளது. இவ்வழியே அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் மாவட்ட விளையாட்டு திடல் நுழை வாயிலிருந்து குரும்பன் சாவடி ரவுண்டானா வரை சாலையின் இருபுறமும் அதிகளவில் மண்கள் தேங்கியுள்ளதால் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு, இருசக்கர வாகன ஓட்டுகள் வழி விட்டு ஒதுங்கி நிற்கும்போது மண்கள் சறுக்கி விடுவதால் அதிகளவில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் காற்று அடிப்பதால் மண்கள் காற்றில் பறந்து அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்