< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 Sep 2022 5:38 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், காலாடிப்பட்டி சத்திரத்தில் இருந்து வாதிரிப்பட்டி செல்லும் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வானகங்களும், அதிக அளவில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடை அமைக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் அண்ணாபன்னை விவசாய கல்லூரி, புகழ்பெற்ற குடுமியான்மலை குடைவரை கோவில், அரசுபள்ளிகள், பள்ளிவாசல், சர்ச், திருமணமண்டபம் உள்ளிட்டவை உள்ளது. மேலும் இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அண்ணாபன்னை அருகே புதுக்கோட்டை, மணப்பாறை சாலையில் நிலையப்பட்டி சந்திப்பில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி சிறுசிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் இச்சாலையில் பெரியளவில் வாகன விபத்து ஏற்படுவதற்கு முன்பு நிலையப்பட்டி சந்திப்பில், வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெடி வெடிப்பதால் வீடுகளில் விரிசல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வீட்டு விசேஷங்கள், திருவிழாக்கள் முதல் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகவும் அதிக சத்தம் கொடுக்கும் வெடிகள் வெடிப்பது வழக்கமாக உள்ளது. மேலும் கீரமங்கலம் பஸ் நிலையம், கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் அருகிலும் அதிக சத்தம் உள்ள காகித வெடிகள் அதிகமாக வெடிக்கப்படுகிறது. இந்த வெடிகளால் பழைய கட்டிடங்களிலும், புதிய கட்டிடங்களிலும் விரிசல் ஏற்படுகிறது. இதேபோல தொடர்ந்து காகித வெடிகள் வெடிப்பதால் கட்டிடங்கள் சேதமடைந்து உடையும் நிலையும் ஏற்படும். பல நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் வெடிச்சத்தம் கேட்டு மயக்கமடைகின்றனர். மேலும் சாலை எங்கும் காகிதங்கள் குப்பைகளாக பரவி சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கொசுமருந்து அடிக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவவும், தொற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் கீழே விழும் வாகன ஓட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வலையப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயன்பாடற்ற பட்டி

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திறந்தவெளியில் சுற்றித்திரியும் மாடுகள், விவசாய நிலத்தில் மேயும் மாடுகளை பிடித்து அடைக்கும் பட்டி இருந்து வந்தது. தற்போது அது பயன்பாடு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. அதனை நூலக கட்டிடம் இன்றி சிறிய அறையில் செயல்பட்டு வரும் அரசு பொது நூலக கட்டிடத்தை இந்த இடத்தில் அரசு நூலக கட்டிடம் கட்டிட பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்