< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 Sep 2022 7:14 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான வடிகால் பாலம்

திருச்சி மாநகராட்சியில் 63-வது வார்டு பகுதியைச் சேர்ந்த அய்யப்ப நகர், சுப்பிரமணிய நகர் மற்றும் கோகுலே தெரு சந்திப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் மழை நீர் வடிகால் பாலம் உடைந்து கம்பி வெளியில் தெரிகிறது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டுகள் தவறி விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஒக்கரை ஊராட்சியிலுள்ள இந்திரா நகர் குடியிருப்புகளுக்குள் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த நிலையில் மழை பெய்யும்போது மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதிய ரேஷன் கடை கட்டப்படுமா?

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பி.கே.அகரம் அரிஜனதெருவில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் 200 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். தற்காலிகமாக இந்த கடை மகளிர் சுய உதவி குழு இயங்கி வந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் எண்ணெய் பாக்கெட்டுகள், பருப்பு, அரிசி உள்ளிட்ட மூட்டைகள் எலிகளால் கடித்து குதறப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் இந்த ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் ஒரே தவணையாக இல்லாமல் 3 தவணையாக வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட புதுப்படி சந்து பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கரட்டாம்பட்டி ஊராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி நகர்-சிறுகாம்பூர் மெயின்ரோட்டில் உள்ள ரேஷன் கடை எதிர்புறம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட சேங்குடி கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்