< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
4 Sep 2022 5:59 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வேகத்தடையை மதிக்காத லாரிகள்

அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் கா.கைகாட்டி-அரியலூர் சாலை மிக முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு சிமெண்டு மற்றும் தனியார் உள்ளிட்ட 9 ஆலைகள் இயங்கி வருகிறது. சிமெண்டு ஆலைகளுக்கு சிமெண்ட் தயாரிக்க சுண்ணாம்பு கற்களை வி.கைகாட்டி அருகே உள்ள புத்தூர், வெளிப்பிரிங்கியம், காட்டுப்பிரிங்கியம், சின்னநாகலூர், ரெட்டிபாளையம், மயிலாண்டகோட்டை பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் அதிக பாரத்துடன் படுதா போடாமல் சுண்ணாம்பு கற்களை வி.கைகாட்டி, அஸ்தினாபுரம் வழியாக அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் 24 மணி நேரமும் எடுத்துச் செல்லப்படுகிறது. பெரும்பாலான டிப்பர் லாரிகளை வேகமாக டிரைவர்கள் இயக்குகின்றனர். சாலையில் உள்ள வேகத்தடையில் மதிப்பதே இல்லை. இதனால் வேகத்தடையில் லாரிகள் வேகமாக செல்லும்போது லாரிகளில் இருந்து சுண்ணாம்புக்கல் சிதறி சாலையில் கீழே விழுந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

அரியலூரில் இருந்து விக்கிரமங்கலம் வழியாக ஸ்ரீபுரந்தான் வரை தினந்தோறும் அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதால் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீபுரந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளிலிருந்து அரியலூர் நகருக்கு அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ் கூட்ட நெரிசலில் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அரியலூரில் இருந்து ஸ்ரீபுரந்தான் வழித்தடத்தில் கூடுதலாக பஸ்களை இயக்கி மக்களின் சிரமங்களை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் அருகே உள்ள பள்ளேரி ஏரி கரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இந்த வழியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதி முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் ஜெயங்கொண்டம் செல்லும் பஸ் நிறுத்த பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றிவிட்டு, குண்டும், குழியுமாக சாலைகளில் சிமெண்டு கலவைகளை கொண்டு சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டிக்கு தெற்கே உள்ளது முனியங்குறிச்சி கிராமத்தில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு முன்புறம் தற்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் முன்பாக விபத்துக்கள் நிகழாமல் இருக்க மாணவர்களின் நலன் கருதி எவ்வித வேகத்தடையும் அமைக்கவில்லை. அதேபோல் வடக்கு பகுதியில் அரசு அங்கன்வாடி பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்