< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
3 Sep 2022 6:09 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார வளாக பணி முடிக்கப்படுமா?

கரூர் மாவட்டம், சேமங்கி அருகே பெரியார் நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரியார் நகர் பகுதி மிகவும் குறுகிய இடமாக இருப்பதால் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார வளாகம் கட்ட முடியாது சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி காகித ஆலை நிறுவனம் சார்பில் பெரியார் நகர் எதிரே உள்ள புறம்போக்கு நிலத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் சுகாதார வளாகம் கட்டும் பணி பாதியிலேயே நின்றுவிட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார வளாகம் கட்டாமல் பாதியிலேயே நிற்பதால் சுகாதார வளாகம் முழுவதும் செடி-கொடிகள், சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளது. சுகாதாரம் வளாகம் இன்றி பெரியார் நகர் பகுதி பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கால்வாய் அமைக்கும் பணி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அந்த கழிவுநீர் கால்வாய் முழுமையாக கட்டப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் மூலம் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், மழை காலங்களில் வெள்ள நீரும் இந்த கழிவுநீர் கால்வாய் மூலம் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால் பாதி அளவு மட்டும் கால்வாய் கட்டியிருப்பதால் மீதமுள்ள பகுதி தரைமட்டமாக உள்ளதால் கழிவுநீரும், மழை காலங்களில் மழை நீரும் அதிக அளவு வந்து கால்வாயையொட்டி உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும்

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நெடுகிலும் பல்வேறு பகுதியில் இருந்து கட்டிட இடுபாடுகளை கொண்டு வந்து தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதனால் 2 வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது 3-வது வாகனம் ஓரத்தில் செல்லும்போது அந்த வாகனம் இடுப்பாடுகளில் பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகளும் இரவில் செல்லும்போது கட்டிட இடிபாடுகள் தார்சலை ஓரத்தில் இருப்பது தெரியாமல் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டிட இடுப்பாடுகளை தார் சாலை ஓரத்தில் கொட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியில் அவ்வப்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வரும்போது காவிரி ஆற்று அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து தொடர்ந்து அங்கு குடியிருப்போர் பாதிப்படைந்து வருகின்றனர். குடியிருப்பு வீடுகள் உள்ள காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைத்து வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் குடியிருப்போர் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்களை முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைத்து காவிரி ஆற்றின் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேறும், சகதியுமான சாலை

கரூர் மாவட்டம், மண்மங்கலம், கஸ்தூரி நகரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கிளை அலுவலகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இந்த சாலை மண் சாலையாக இருப்பதால் மழைகாலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்