< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
3 Sep 2022 6:07 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான தண்ணீர் தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பணபட்டி ஊராட்சி மருதாந்தலை அரசுமேல்நிலைப்பள்ளியின் வெளி புறத்தில் காவிரி தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டி ஆளமாகவும் தண்ணீர் நிறைந்து உள்ளதால் இதில் மாணவர்கள் தவறி விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக மூடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோர மரங்களில் விளம்பர பலகை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பள்ளி, கல்லூரி விளம்பரங்கள், கம்பெனி விளம்பரங்கள் என பலதரப்பட்ட விளம்பரங்கள் செய்ய மரங்களில் ஆணி அடித்து விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். இதனால் சாலையோர மரங்கள் ஒரு சில ஆண்டுகளில் பட்டுப்போய் விடுகிறது. மரம் இருந்தால் தான் மழை வளம் கிடைக்கும் என அரசு கூறுகிறது. ஒரு பக்கம் மரங்களை நடுகின்றோம். மறுபக்கம் சமூக விரோதிகளால் மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. அதோடு தனியார் பள்ளி, கல்லூரி, விளம்பர கம்பெனிகள் சாலையோர மரங்களில் ஆணி அடித்து தங்களது விளம்பர போர்டுகளை வைத்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எலும்பு கூடான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் வடநகர் செல்லும் சாலை ஓரத்தில் புதிய பஸ் நிலையத்தின் கீழ்புரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள அனவயல் எல்.என்.புரத்தில் அமைச்சப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலையில் ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எல்லை பிரச்சினை தீர்க்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு பகுதியில் மாவட்ட எல்லை முடிந்து தஞ்சாவூர் மாவட்ட எல்லை தொடங்குகிறது. இரு மாவட்ட எல்லை போர்டுகளும் சுமார் 20 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதுடன் சாலை மராமத்துப் பணியை முடித்து விடுவதால் இரு போர்டுகளுக்கும் இடையில் உள்ள 20 மீட்டர் சாலையை யார் பராமரிப்பது என்ற எல்லைப் பிரச்சினையால் சாலை உடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இந்த வழியாக அரசு பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள், மாணவர்கள் சைக்கிளில் செல்லவும் அச்சப்படுகின்றனர். ஆகவே எல்லை பிரச்சினையை தீர்த்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்