< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Aug 2022 6:53 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சீரமைக்கப்படாத சாலை

கரூரில் ஆண்டாங்கோவில்-அண்ணாநகர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் இந்த பள்ளத்தை சரிசெய்யும் வகையில் அதன்மீது ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதன் காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாய்க்காலில் படர்ந்த செடி, கொடிகள்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை, வஞ்சியம்மன் கோவில் தெரு வழியாக முக்கிய வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இந்த வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர் சென்று வருகிறது. இந்நிலையில் வஞ்சியம்மன் கோவில் தெரு வழியாக செல்லும் வாய்க்காலில் முட்செடிகளும், கொடிகளும் அதிகளவு வளர்ந்துள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு இவை மிகவும் தடையாக இருக்கும் என்பதால், வாய்க்காலில் படர்ந்துள்ள செடி,கொடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திறந்த நிலையில் ஏற்றி செல்லப்படும் கட்டுமான பொருட்கள்

கரூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கல், ஜல்லிக்கற்கள் போன்றவை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும்போது பெரும்பாலான வாகனங்கள் திறந்த நிலையில்தான் கொண்டு செல்கின்றன. இதனால் அந்த பொருட்களின் துகள்கள் பறந்து செல்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர் மாவட்டம், நடையனூர்அருகே இளங்கோ நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை தார்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டாமல் அதன் அருகில் கீழே கொட்டி வருகின்றனர். மேலும், குப்பைத் தொட்டியின் மூடியை திறந்து வைத்துள்ளதால் தொடர் மழையின் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொதுமக்கள் குப்பைத் தொட்டியில் கழிவுகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், கவுண்டன்புதூரிலிருந்து நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலைக்கு செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக இந்த தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தார்சாலை குண்டும், குழியமாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனத்தை அதில்விட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த தார்சாலையை சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்துகளை தடுக்க வேண்டும்

கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலை ஓரத்தின் நெடுகிலும் மின்கம்பங்கள் நடப்பட்டு, அதன் வழியாக மின்கம்பிகள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தார்சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பங்களை மாற்று இடத்தில் நட்டு விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்