< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
25 Aug 2022 5:49 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதுகாப்பற்ற மின்சாதன பெட்டி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சின்னவளையம் வடக்குத்தெருவில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நீர்த்தேக்க தொட்டியுடன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டாரை இயக்க வைக்கப்பட்டுள்ள மின்சாதன பெட்டி பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. மழைபெய்யும்போது இந்த மின்சாதன பெட்டி அருகே மழைநீர் தேங்கி நிற்பதினால் இவற்றை பயன்படுத்த முடிவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு இந்த மருத்துவமனையையே பயன்படுத்தி வருகின்றனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனையின் இரவு நேர பயன்பாட்டிற்கு ஜென்செட் வசதி அரசாங்கத்தால் அமைத்து தரப்பட்டுள்ளது. ஆனால் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. எனவே மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் மின்சாரம் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆனாலும் அவ்வளவு நேரமும் மருத்துவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவருமே மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவசர சிகிச்சைகளுக்கு வருபவர்கள் இதனால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தொடர்புடைய அதிகாரிகள் இதனை கவனித்து மின்தடை இல்லாத மருத்துவமனையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் திருச்சி-சிதம்பரம் சாலையில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து வேலப்பன் செட்டிஏரி வரையில் உள்ள சாலையில் ஆடு மற்றும் மாடுகள் இரவு நேரத்தில் படுத்துக்கொள்வதினால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பஸ், கார் மற்றும் லாரி செல்லும் போது மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். சிலர் ஆடு மற்றும் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்சாதனங்கள் பழுது

‌அரியலூர் மாவட்டம், மேலக்கருப்பூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதினால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தின் 5-வது வார்டு தெற்கு தெருவில் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்