< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 Aug 2022 5:53 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தில் காரை செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றி கடந்த 13-ந் தேதி முதல் செயல்படவில்லை. இந்த மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ஊருக்கு வரும் தண்ணீர் மின் மோட்டார் இயக்கப்படுகிறது. தற்போது இந்த மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் கடந்த சில தினங்களுக்கு மேலாக குடிநீர் வினியேகாம் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்று விடுகின்றனர். அவ்வாறு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான வாய்க்கால் பாலம்

பெரம்பலூர் மாவட்டம், குருர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வாய்க்காலில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து இடிந்த நிலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் சிறுவர், சிறுமிகள், வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்பு இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பராமரிக்கப்படாத கழிவறைகள்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் பராமரிப்பு இல்லாமல் மிகவும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போலீசார் ரோந்து வர வேண்டும்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாடி ரோட்டில் அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியில் இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலைகளால் இரவு நேரங்களில் பெருமளவு இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்தும் நிகழ்ந்து வருகின்றது. இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் வீடுகளுக்கு பின்புறமாக சுற்றித்திரிவதால் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருகின்றது. எனவே இரவு நேரங்களில் கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார் சமத்துவபுரம் உள் பகுதிகளிலும் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்