< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Aug 2022 5:49 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி, அண்ணாநகரில் இருந்து காமராசபுரம் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் கீழே விழுவதுபோல் காணப்படுகிறது. சாலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பையா, அரிமளம்.

ஒலிபெருக்கிகளால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூர் எஸ்.பி. நகரில் இலுப்பூர்-மாத்தூர், செங்களாக்குடி-ஆவூர் ஆகிய நான்கு பிரிவு சாலைகள் உள்ள பகுதியாக உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் மற்றும் குடியிருப்புகள், திருமண மண்டபம், அரசு பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் ஆவூர் எஸ்.பி. நகரில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் அதிக அளவில் ஒலிபெருக்கிகளை கட்டி பாடல் இசைகளை இசைக்க விடுவதால் அதிக சத்தம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பதால் பள்ளி நேரத்தில் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடுவதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பெரும் இடையூறாகவும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்படுமா?

புதுக்கோட்டை கட்டியாவயலில் இருந்து அன்னவாசல், குமரமலை செல்லும் சாலை பிரியும் இடத்தில் ஒரே நேரத்தில் 3 புறமும் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடையாமல் இருக்கவும், விபத்தினை தடுக்கவும் இரும்பு தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கட்டியாவயல்.

வடிகால் வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் சாலையோரம் தண்ணீர் தேங்குகிறது. மேலும் சிறிய அளவு மழை பெய்தால் கூட இந்த சாலையின் வளைவில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலங்குடி.

வழிகாட்டி பலகைகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் உள்பட சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஊர் பெயர் பலகை மற்றும் வழிகாட்டி பலகைகளில் விளம்பர போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் ஊர் பெயர் பலகைகளை மறைத்து விடுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள், பயணிகள் ஊர் பெயர் மற்றும் திசைகள் தெரியாமல் மாறிச்சென்று விடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அன்னவாசல்.

மேலும் செய்திகள்