பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நிழற்குடை அமைக்கப்படுமா?
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள ரோவர் வளைவு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், பெரம்பலூர்.
பாம்புகள் நடமாட்டம்
பெரம்பலூர் மாவட்டம், சு.ஆடுதுறை அய்யனார் கோவில் தெருவில் அரசு மேல்நிலைபள்ளி, நீர்த்தேக்க தொட்டி அருகே சாலையோரத்தில் புதர்மண்டி காணப்படுவதினால் இப்பகுதியில் பாம்புகள் உள்பட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சிமெண்டு சாலையை யொட்டிய பகுதிகளில் உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முருகன், சு.ஆடுதுறை.
காய்ந்து வரும் மரக்கன்றுகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை முதல் குரும்பாபாளையம் வரை போடப்பட்ட சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த மரக்கன்றுகள் காய்ந்து பட்டு போயும், கூண்டுகள் சாய்ந்தும் கிடக்கின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மரக்கன்றுகளை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கொட்டரை.