பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் புது விராலிப்பட்டி குப்புசாமி கோவில் சாலை முதல் ஈச்சம்பட்டி வரை செல்லும் தார் சாலையில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலகுரு, பழைய விராலிப்பட்டி.
சிதிலமடைந்த கட்டிடம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குணம் கிராமத்தில் 2002-2003 நிதியாண்டில் பகுதி-2 திட்டத்தின் கீழ் ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் இதுவரை எந்த விதமான சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படுவதில்லை. இதனால் கட்டிடத்தின் மேற்கூரை உட்பட சுவர்கள் அனைத்தும் வெயில், மழை போன்ற இயற்கை இடர்பாடுகள் காரணமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குமார் அய்யாவு, செங்குணம்.
தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் பெரம்பலூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதினால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அனைத்தும் எரிந்து நாசமாகி விடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கொளக்காநத்தம் பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கொளக்காநத்தம்.