அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இறந்து கிடக்கும் தெருநாய்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள துலாரங்குறிச்சி பஸ் நிறுத்தம் எதிரே வாகனத்தில் அடிபட்ட நிலையில் சாலையோரம் ஒரு தெருநாய் இறந்து கிடக்கிறது. இந்த தெரு நாய் இறந்து சுமார் 4 நாட்கள் ஆவதால் அதன் உடல் அழுகி தற்போது இப்பகுதியில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு நிற்பதுடன், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நாயின் உடலை மண்ணில் புதைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், துலாரங்குறிச்சி.
சீரமைக்கப்படாத பாதை
அரியலூர் மாவட்டம் செந்துறை சமத்துவப்புரத்திற்கு கிழக்கு பகுதியில் சுடுகாடு இருந்தது. அதற்கு சரியான சாலை வசதி செய்து கொடுக்காததால் அந்த வழியே செல்லும் நீரோடையை தாண்டி செல்லமுடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுடுகாட்டு பாதையை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். யாரும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது பாளையத்தார் ஏரியை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் சமத்துவபுரம் சுடுகாட்டு பாதையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செந்துறை.
தாமதமாக நடக்கும் சாலை பணி
அரியலூர் மாவட்டம், கழுமங்கலம்- நாகல்குழி வரை தார் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கழுமங்கலம்.