திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எலும்பு கூடான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரில் இருந்து பெரியசாமி கோவில் செல்லும் பெரும்பாதையில் ஆற்றையொட்டியுள்ள மின்மாற்றியில் இருந்து கம்பிகள் செல்லும் மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது பலத்த காற்று அடித்தால் இந்த மின்கம்பம் முறிந்து அவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், பி.மேட்டூர்.
நிழற்குடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தநல்லூர் ஒன்றிய அலுவலக பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறி செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள், நோயாளிகள் நிழற்குடை இன்றி மழை பெய்யும் போதும், வெயில் காலங்களிலும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்தநல்லூர் ஒன்றிய அலுவலக பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அந்தநல்லூர்.
குடிநீர் தட்டுப்பாடு
திருச்சி மாவட்டம், அந்தநல்லுர் ஒன்றியம், பெருகமணி கிராமம், மீனாட்சிபுரம் குடித்தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் இன்றி அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராமன், மீனாட்சிபுரம்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், பாப்பாக்குறிச்சி வடக்கு காட்டூர் வி.பி.நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், இப்பகுதியின் சாலை ஓரத்தில் கழிவுநீர் ஓடுவதுடன், சாலையின் நடுவே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.பி.நகர்.